Women and Culture











"உடை உடுத்துவதில் தொடங்கி, பொது இடத்தில் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்பது வரை, பெண்கள் மீது பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து, அதற்கு கலாசாரம் என்றும் பெயர் சூட்டி, பெண்களை அவர்களின் சுதந்திரத்தின்படி செயற்பட விடாமல் தடுக்கிறது இந்தச் சமூகம்'' என்று சற்று ஆவேசமாகத் தன்னுடைய பேச்சைத் தொடங்குகிறார் கொழும்பில் பணியாற்றும் சமூகசேவகி நிர்மலா.

"அத்துடன் விட்டார்களா? பெண்கள் என்னென்ன செய்ய வேண்டும், என்னென்ன செய்யக்கூடாது என்பதை வரிசையாகப் பட்டியலிட்டு, அதன்படி வாழ முற்படும் பெண்களிடம் கருத்து எதையும் கேட்காமல் அவர்கள் மீது திணிக்கிறது ஆணா திக்க சமுதாயம். பெண்கள் கலாசாரத்தின் குறியீடுகள் என்று குறிப்பிடுகிறீர்களே! இதில் பெண்களுக்கு உடன்பாடு இருக்கிறதா? என்று யாரேனும் கேட்டிருக்கிறார்களா? அல்லது அந்த உடன்பாட்டின் ஆயுள் எவ்வளவு என்பதையாவது ஆணாதிக்க சமுதா யம் நிர்ணயித்திருக்கிறதா?'' 

"கலாசாரத்தின் நிரந்தர அடையாளங்களாக மாற்றப்பட்டதால் பெண்கள் சந்தித்த இழப்புகள் குறித்து யாரேனும் விசனப்பட்டிருப்பார்களா? இன்றுவரை பெண்களின் வாழ்க்கையை நிர்ணயிப்பதில் அவளின் கருத்துகளைவிட பெற்றோர்கள், உடன் பிறந்தவர்கள், உறவினர்கள் உள்ளிட்ட மற்ற வர்களின் கருத்துகளுக்குத்தானே முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது? உதாரணமாக மறுமணத்தை எடுத்துக்கொள்வோம். கணவன் இறந்துவிட்டார் என்றால் ஒரு விதமான பார்வை. கணவனுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, அதனால் மணமுறிவு பெற்ற பெண்ணுக்கு மறுமணம் என்றால் அதற்கொரு பார்வை. ஏனிந்த முரண்பாடு?

இவ்விரண்டு விடயத்திலும் பங்கெடுத்துக்கொள்ளும் ஆண்களை எதிர்த்து ஒரு வார்த்தைகூடப் பேச முடியாத ஊமையாகி விட்டார்கள் பெண்கள் மற்றும் பெண்ணியலாளர்கள். ஏனென்று ஆராய்கையில் எம்முடைய கலாசாரம் இதுதான் என்று ஆணித்தரமாக பதில் வருகிறது. எதை எதையோ மீளாய்வுக்கு உட்படுத்துகிறார்களே! அதன்படி, இதனை எப்போது மீளாய்வு செய்யப் போகிறீர்கள்? 

கலாசாரத்தின் குறியீடுகளைச் சுமப்பதில் ஆண்களுக்குப் பங்கில்லையா? ஏற்க ஏன் தயங்குகிறீர்கள்? இன்றைய பொருளா தார நெருக்கடி மிக்க கால கட்டத்தில், குடும்பத்தின் நிதி நிலையை மேம்படுத்துவதற்கு பெண்களின் பங்களிப்பை எதிர்பார்க்கும் ஆண்கள் அதற்கொரு நியாயம் கற்பிக்கும் ஆண்கள் விரும்பியோ, விரும்பாமலோ கலாசாரத்தின் அடையாளங்களை நீண்ட காலமாகச் சுமந்துவரும் பெண்களின் சொல்லயியலாத வேதனையில் பங்கெடுத்துக் கொள்வதற்கு ஒரு நியாயத்தை எப்போது கற்பித்துக்கொள்ளப்போகிறீர்கள்?''

""ஒரு பெண் குழந்தை பிறக்கும் தருணத் தில் விதிக்கப்படும் கட்டுப்பாடு மரணம் வரை தொடர்கிறது. ஆனால் அந்தக் குழந்தை ஆணாக இருந்தால், எந்த வித கட்டுப்பாடும் கிடையாது என்ற சூழல் இனிமேலும் தொட ரலாமா?'' என்று கேட்டு விட்டுத் தன் உரையை முடிக் கிறார். இந்நிலையில் பெண்களின் மீது கலாச்சார குறியீடுகள் திணிக்கப்படுகி றதா? என்று சிலரிடம் கேட்டோம்.

ரீமா பேகம், மாணவி, அம்பாறை

மதரீதியாக விதிக்கப்படும் சில சட்டதிட்டங்களைப் பெண்கள் பின்பற்றும்போது சில கருத்து முரண்கள் எழுவது இயற்கை. ஆனால் அதில் உள்ள சூட்சுமங்களை உணர்ந்து கொண்டால், கலாசார அடையாளங்களைச் சுமப்பது பெரிய விடயமல்ல. இங்கு சில விடயங்கள் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. அதனைக் களை எடுத்தாலே போதும்.

எஸ்தர், இல்லத்தரசி, வத்தளை

கலாசாரம் என்கிற விடயம் இல்லையென்றால் நாம் எம் பிரத்தியேக அடையா ளங்களை இழந்துவிடுவோம். சில தருணங்களில் பொதுமைப்படுத்தப்படுவோம். இது எமக்கு எதிராகவே திரும்பிவிடும். ஆகையால் கலாசாரக் குறியீடுகள் அவசியம் தேவை. அதேநேரம் இவை யார் மீதும் திணிக்கப்படுவதில்லை. அப்படி திணிக்கப்படுவதாக கருதுபவர்கள், அதனை மீறிச் செயற்படும்போது, சிறு சலசலப்பு இருககுமே தவிர, பாதிப்புகள் இருக்காது.

நீலவேணி, வங்கி ஊழியர், யாழ்ப்பாணம்

வேகமான காலகட்டத்தில் கலாசாரத்தைப் பற்றியெல்லாம் அதிகளவில் கவலை படத்தேவையில்லை. கலாசாரத்தை மீறுபவர்களுக்கும், கலாசாரத்தைப் பின்பற்றுபவர்களுக்கும் இன்றைக்கு ஒரே அளவிலான மதிப்புத்தானிருக்கிறது. கலாசாரத்தை நாம் பாதுகாக்கதேவையில்லை. கலாசாரம் தான் எம்மை பாதுகாக்கிறது. இதில் திணிப்பு என்று கூறுவதெல்லாம் முதிர்ச்சியற்றவர்கள் கருத்து. 

Comments

Popular posts from this blog

புதுமை பெண்கள் -கவிதைகள்

பெண் கல்வி